அரசாங்கம்
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஊடகத்துறை முக்கியமாக அரசாங்கத்தின் கீழே இருந்தது.
அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகை நிறுவனம். இலங்கை
ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகியன அரசாங்கத்திற்கு
சொந்தமான தொலைக்காட்சி நிலையங்கள். அதேபோன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசுக்கு
சொந்தமான வானொலி நிலையம். நேரடியாக ஊடகத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மாத்திரமன்றி,
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் மூலமாக அச்சு மற்றும்
இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவும் அரசாங்கம் விளங்குகின்றது. தொலைத்தொடர்பு
ஆணைக்குழு தவிர்த்து மற்றைய அமைப்புக்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கண்காணிப்பின்
கீழ் வருகின்றது. லேக் ஹவுஸ் என அனைவராலும் அறியப்படும் ஏ.என்.சி.எல் அரசாங்கத்தின் கீழ் உள்ளது.
அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட் சட்டம் 1981 ஆம் ஆண்டின் 35 ஆம்
இலக்கத்தின் கீழ் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்து. அரசுடமையாக்கப்படுவதற்கு முன்னதாக லேக் ஹவுஸ்
குழுமத்தினால் இது தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 87.56 வீதமான பங்குகள்
அரசாங்கத்தின் சார்பாக பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்திற்கு சொந்தமானதுடன், பொதுநம்பிக்கை
பொறுப்பாளர் கட்டளைச்சட்டம் 1922 ஆம் ஆண்டின் முதலாம் இலக்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் வருகின்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தோற்றத்துடன் இலத்திரனியல் ஊடகத்துறையில் அரசாங்கத்தின்
பங்கு ஆரம்பமாகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1966 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க
சட்டத்தின் மூலம் 'றேடியோ சிலோன்' என முன்னர் அழைக்கப்பட்ட ஒலிபரப்புத் திணைக்களம்
கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்றது. தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு அலைவரிசைகளை
வழங்குவதற்கான அனுமதியை அமைச்சிற்கு இந்த சட்டமூலம் வழங்குகின்றது. இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனம் 1982 ஆம் ஆண்டின் ஆறாம் இலக்க சட்டத்தின் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
தோற்றுவிக்கப்பட்டது. இதுவே உத்தியோகபூர்வ அரச தொலைக்காட்சி சேவை ஆகும். நிதி மற்றும் வெகுசன
ஊடக அமைச்சு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அலைவரிசை அனுமதியை வழங்கவும் இந்த சட்டம்
பயன்படுத்தப்படுகின்றது. முதலாவது தனியார் தொலைக்காட்சி சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால்
ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் அது அரசுடமையாக்கப்பட்டது. தற்போது அது இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனம் 1982 ஆம் ஆண்டின் ஆறாம் இலக்க சட்டத்தின் கீழ் வருகின்றது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வரிப் பணத்தில் இருந்து நிதி வழங்கப்படுகின்ற போதும்,
ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் மற்றும்
விளம்பரங்களின் மூலமே முக்கியமான வருமானம் கிடைக்கின்றது. 2012 ஆம் ஆண்டு ரூபவாஹினி
கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையில் அரசினால் வழங்கப்பட்ட நிதி 11 மில்லியன் ரூபா எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நிதி அமைச்சின் கீழ் உள்ள
திறைசேரியினால் அளிக்கப்படும் வரிப்பணத்திலேயே தங்கியுள்ளது. மேலும், இந்த நிறுவனங்களுக்கு
உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் நீக்குவதற்கு அமைச்சிற்கு அதிக அதிகாரத்தை வழங்கும்
வகையில் சட்டம் காணப்படுகின்றது. நியமனத்தின் போது தேவையான தகுதிகள் மற்றும் அடிப்படை குறித்த
தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தினால், நிர்வாகக் கட்டமைப்பில் அமைச்சு தனது அதிகாரத்தை
முன்னிறுத்தும் வகையில் காணப்படுகின்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தபானச் சட்டம் 1973 ஆம் ஆண்டின் இலக்கம் 5 மூலம் பத்திரிகை ஸ்தாபனம்
ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் இந்த அமைப்பானது ஊடகம் தொடர்பான முறைப்பாடுகளை
விசாரிப்பது, அபராதம் விதிப்பது மற்றும் பத்திரிகைகளை பதிவு செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை பத்திரிகை
ஸ்தாபனத்திற்கு நேரடியாக புதிய உறுப்பினர்களை நியமித்ததுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மீள்
எழுச்சி பெற்றது. அதேவேளை, இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு 1991 ஆம் ஆண்டின் இலக்கம் 25
சட்டத்தின் மூலம் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டு ஒலிபரப்பு சேவைகளுக்கு அலைவரிசை
அனுமதிகளை அளித்து வருகின்றது. இங்கும் ஆணைக்குழுவிற்கான நியமனங்களில் அரசியல் தலையீடுகள்
காணப்படுகின்றன. உதாரணமாக முன்னாள் மற்றும் தற்போதைய அரசாங்கங்களின் ஜனாதிபதி
செயலாளர்கள் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
அரசாங்க ஊடக நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்களிலும் இரண்டாம்தர தகவல் மூலங்களிலும் கிடைக்கின்றன. நிறுவன கட்டமைப்பு பற்றிய தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திருந்து பெறப்பட்டன.