This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/29 at 11:12
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சட்டம்

இலங்கையில் ஊடக ஒழுங்கமைப்பு

இலங்கையில் ஊடகம் பல்வேறு சட்டங்களினால் ஆளப்படுகின்றது. குறிப்பாக பதிவு செய்தல், அனுமதி உரிமத்தை பெற்றுக்கொள்ளுதல், உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துதல், நிர்வாகம் குறித்து அறிவித்தல் என பல பிரிவுகளையும் சட்டம் கட்டுப்படுத்துகின்றது. எனினும் இந்த சட்டங்களில் ஒன்றுகூட குறிப்பாக ஊடக உரிமைத்துவம்; அல்லது உரிமையாளர் விபரங்களை பொதுமக்களுக்கு அறியப்படுத்துவது குறித்து இல்லை. 

ஒழுங்குமுறை கட்டமைப்பை ஆராய வேண்டுமானால், இந்த துறையில் உள்ள முக்கியமானவர்களையும், ஊடகத்தின் பல்வேறு துறைகளில் அவர்களின் பங்குகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் ஊடகத்துறையில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. (1) அரச கட்டுப்பாட்டில் உள்ளவை (2) தனியார் துறை.

இலங்கையின் அனைத்து ஊடகப் பிரிவுகளையும் ஒழுங்குபடுத்தும் அல்லது கையாளும் சுயாதீனமான ஒழுங்குபடுத்தும் அமைப்போ, சட்டமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ஊடகத்துறையானது நிதி மற்றும் வெகுசன அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வருகின்றது. மேலதிகமாக, ஊடகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஒழுங்குபடுத்தும் தனித்தனி அமைப்புக்கள் காணப்படுகின்றன. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு என தனித்தனியே ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கள் மற்றும் சட்டங்கள் உள்ளன. (கீழேயுள்ள அட்டவணை 1 ஐ பார்க்கவும்)

ஊடகம்வகைதொடர்புடைய அமைப்பு (கள்)விபரங்கள்
அச்சு  பத்திரிகைகள் /அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள்இலங்கை பத்திரிகை பேரவை (SLPC) அரச ஒழுங்குபடுத்தும் அமைப்பு 1973 ஆம் ஆண்டின் இலக்கம் 5 இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது 
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்  
(SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) 
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஊடகத்துறையினால் உருவாக்கப்பட்ட சுயாதீனமான தன்னார்வ ஒழுங்குபடுத்தும் அமைப்பு. இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் முக்கிய அங்கமாக இருப்பதுடன், முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பு

இலத்திரனியல்

வானொலி ஒலிபரப்புக்கள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1974 ஆம் ஆண்டின் இலக்கம் 5 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அரச ஊடகமாக செயற்படுவதுடன், தனியார் வானொலிகளுக்கு அனுமதி உரிமம் வழங்கும் அமைப்பாகவும் உள்ளது. 

இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு (TRC) கீழே பார்க்கவும் 

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC)இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 1982 ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அரச ஊடகமாக இருப்பதுடன், தனியார் தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுமதி உரிமம் வழங்கும் அமைப்பாகவும் உள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு (TRC) கீழே பார்க்கவும் 
வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிஒளிபரப்புக்கள்இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு (TRC) 

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 1991 ஆம் ஆண்டின் இலக்கம் 25 இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நடவடிக்கைளுக்குமான ஒழுங்குபடுத்தும் அமைப்பு இதுவாகும்.

அலைவரிசைகளைப் பெற்றுக்கொள்ளவும், ஒலிஒளிபரப்பு உபகரணங்களை இயக்கவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

டிஜிட்டல்கணனி மற்றும் இணையம் மூலமாக சென்றடையும் டிஜிட்டல்
உள்ளடக்கங்கள்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு (TRC)இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு (TRC) மேலே குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தொலைத்தொடர்பு நடவடிக்கைளும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. இணைய சேவை வழங்குர்களுக்கான அனுமதி உரிமத்தை வழங்கும் பொறுப்பும் இதன் வசம் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவைத் தவிர டிஜிட்டல் ஊடகத்தை கட்டுப்படுத்தும் வேறு எந்த சட்டங்களும் இல்லை.

மேலும் அறிந்துகொள்ள

 

 

அச்சு ஊடகம்

அரசாங்கத்திடம் சொந்தமாக லேக் ஹவுஸ் என அறியப்படும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் எனும் பத்திரிகை நிறுவனம் உள்ளது. இது 1981 ஆம் ஆண்டின் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் சட்டத்தின் 35 ஆவது இலக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. ஏ.என்.சி.எல் முன்னதாக லேக் ஹவுஸ் குழுமத்தினால் உருவாக்கப்பட்டது. இது தனியாருக்குச் சொந்தமானது. 1974 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இதனை அரசுடமையாக்கியது. லேக் ஹவுஸ் தவிர மேலும் பல தனியாருக்குச் சொந்தமான பத்திரிகை நிறுவனங்கள் உள்ளன.

அச்சு ஊடகமானது இரண்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வருகின்றது. முதலாவது, இலங்கை பத்திரிகை பேரவை, இது அரசாங்கத்தினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இது அச்சு ஊடகத்திற்கான தன்னார்வ சுயகட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.

இலங்கை பத்திரிகை பேரவை அச்சு ஊடகத்திற்கு எதிராக வரும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றது. குற்றம் சுமத்தப்பட்டால் சிறையில் அடைக்கக்கூடிய அதிகாரம் இந்த அமைப்புக்கு இருந்ததனால் ஊடகத்தை அச்சுறுத்துவதற்காக இந்த அமைப்பை கடந்த காலங்களில் அரசாங்கம் பயன்படுத்தி வந்தது. (ஊடக சீர்திருத்தத்திற்கான செயலகம், 2016) இந்த அமைப்பினை இல்லாதொழிக்கவும், அந்த சட்டத்தை திரும்பப் பெறவும்  மீண்டும் மீண்டும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றின் மூலம் இலங்கை பத்திரிகை பேரவையை செயலற்றதாக்கியது. இருப்பினும், சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. வருடாந்தம் பத்திரிகைகளை பதிவு செய்யும் அமைப்பாக இலங்கை பத்திரிகை பேரவை தொடர்ந்தும் இயங்கிவருகின்றது. எனினும், 2009 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பத்திரிகை பேரவையை மீண்டும் உயிர்ப்பித்தது. இதற்கு ஊடகங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். (ஊடக சீர்திருத்தத்திற்கான செயலகம், 2016) 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தில் குறிப்பிட்டவாறு நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்ளாததை அடுத்து, பேரவையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. எனினும், 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜனாதிபதி சிறிசேன பத்திரிகை பேரவையை மீண்டும் இயங்கச் செய்தார். இந்த நடவடிக்கைக்கு ஊடகத்துறை பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

அச்சுத்துறைக்கு என சுயாதீன ஒழுங்குபடுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஊடகத்துறையின் முயற்சியால் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் உருவானது. 1998 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஊடக சுதந்திரமும், சமூக பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் பலனாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பத்திரிகைத்துறைக்கு இடையே உருவாகும் பிரச்சினைகள், முறைப்பாடுகளை விசாரிப்பதில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒரு முக்கிய அங்கமாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு இயங்கிவருகின்றது.

இலத்திரனியல் ஊடகம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியன அரச ஊடகங்களாகவும் (முறையே வானொலி மற்றும் தொலைக்காட்சி), தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பாகவும் இருவேறுபட்ட பங்கினை வகிக்கின்றன. இலங்கையில் தனியார் நிறுவனங்கள் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு முன்னதாக, இலத்திரனியல் ஊடகத்தில் அரசாங்கம் ஏகபோகத்தை அனுபவித்தது. இலங்கையில் முக்கியமான ஊடகங்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திகழ்ந்தன. எனினும், 1979 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிலையமான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.  எனினும், இது ஆரம்பமாகி சிறிது காலத்திலேயே அரசுடைமையாக்கப்பட்டது. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அரசு அனுபவித்து வந்த ஏகபோகம் முறையே 1987 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், அதற்கான அனுமதி உரிமங்கள் முறையே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

 

தனியார் ஊடகங்கள் இருந்தாலும் அவை சுயாதீனமாக இயங்கின என கூற முடியாது. இந்த நிலையங்கள் பாரிய நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்ததுடன், அவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டன. (ஊடக மறுசீரமைப்பு செயலகம் 2016, பக்கம் 61-63) இந்த நிலையங்கள் அரசியல் தலையீட்டிற்கும் ஆளாக்கப்பட்டன. 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கையின் (ஆர்.கே.டபிள்யூ. கூன்சேகர குழு அறிக்கை என அறியப்படும்) பிரகாரம், தனியார் ஊடக நிலையங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஊடகப் பன்முகத்தன்மையை ஊக்கப்படுத்துவதுடன், ஊடகத்தில் நிலவும் ஏகபோகத்தை தடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஊடக உரிமத்துவம் மற்றும் அரசியல் குழுக்களுக்கு இடையிலான உறவு குறித்து ஆராயப்படாத நிலையில் இதன் மூலம் பன்முகத்தன்மை உறுதிசெய்யப்படுவதாக அர்;த்தம் இல்லை. மேலும், தனியார் ஊடகங்கள் வர்த்தக நலனைக் கருத்தில் கொண்டு அல்லது விளம்பர வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிப்பதற்கு விரும்பவில்லை. மேலதிகமாக, பல ஊடக நிறுவனங்கள் நாட்டின் அரசியலில் நேரடியான பங்கினைக் கொண்டிருக்கின்றன. ஊடக நிறுவனங்களின் உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அரசியலில் பங்கேற்றிருக்கின்றார்கள். (பிரடி எல், 2005)

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருந்து அனுமதி உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிஒளிபரப்பாளர்கள் அலைக்கற்றையை பெற்றுக்கொள்ளவும், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிஒளிபரப்பு உபகரணங்களை இயக்கவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் இருந்தும் அனுமதி உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அரசாங்கம் நடாத்தும் அமைப்பு என்பதுடன், இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பானது. ஒலிபரப்பு சேவைகளுக்கு அலைக்கற்றைகளை வழங்குதல், தொலைபேசி மற்றும் கைபேசி சேவை வழங்குனர்களுக்கு அனுமதி வழங்குதல், இணைய சேவைகள், கேபிள் விநியோகம் மற்றும் சாட்டலைட் ஒலிபரப்பு சேவைகளுக்கு அனுமதி வழங்குதல் என்பவற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொறுப்பு வகிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஊடக மறுசீரமைப்பு செயலகத்தின் அறிக்கையின் பிரகாரம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்படும் அலைக்கற்றை விநியோகம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு திட்டத்தின் பிரகாரம் வழங்கப்படுகின்றது. எனினும், அலைக்கற்றைகளை வழங்குவதில் குறிப்பிட்ட பொறிமுறை அல்லது செயல்திட்டம் இல்லை என்பதுடன், இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முறையான செயல்திட்டம் இல்லாமல் வழங்கப்படுகின்றது.

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகிய ஒலிஒளிபரப்புக்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்களின் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நியமனங்கள் மற்றும் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதாகும். உதாரணமாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நியமனங்கள் நிபந்தனையற்ற அடிப்படையில் அமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றது. தொலைத்தொடர்புகள் பணிப்பாளர் நாயகமும் ஊடகத்துறை அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றார். இந்த நியமனத்திற்கு எந்தவிதமான அடிப்படையோ அல்லது வேலைவாய்ப்பு தகுதிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோன்று தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நியமனங்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கள் சுயாதீனமாக இயங்கவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறவும் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஒலிஒளிபரப்புத்துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு சுயாதீனமானதுடன், அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் இயங்க வேண்டும் என்பதுடன், அரச ஒலிஒளிபரப்பு நிலையங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்காமல் இயங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் (1997இ ளுனு ழே. 1 ஃ 97-15 ஃ 97) வலியுறுத்தியிருந்தது.

டிஜிட்டல் ஊடகம்

டிஜிட்டல் ஊடகத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரத்தியேகமாக எந்த சட்டமும் இல்லை. டிஜிட்டல் ஊடகம் மூலமான ஒளிபரப்புக்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலதிகமாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இணைய சேவை வழங்குனர்களுக்கு அனுமதி உரிமங்களை வழங்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளதுடன், இந்த அனுமதி உரிமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய இணைய சேவை வழங்குனர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே இணைய சேவை வழங்குனர்களுக்கு (தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டவை) வழங்கப்பட்ட அனுமதி உரிமங்களில் உரிமையாளர், நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் கொள்வனவு, குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் பாரபட்சம் காட்டுதலை தவிர்த்தல் போன்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் உள்ள இணையத்தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை தொடர்பாகவோ, இலங்கை மக்கள் தொடர்பாகவோ இலங்கையில் இருந்து அல்லது எங்கிருந்து இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டாலும் பதிவு செய்யப்பட வேண்டும் என 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல்  திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்தது. இந்த உத்தரவானது எந்தவொரு சட்டத்திற்கோ அல்லது விதிகளுக்கோ உட்பட்டது அல்ல. இதனை அடுத்து சில செய்தி வழங்குனவர்கள் தமது இணையத்தளங்களை பதிவு செய்தனர். எனினும் சில இணையத்தளங்கள் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இலங்கையில் மாத்திரம் முடக்கப்பட்டன. (ஊடக மறுசீரமைப்பு செயலகம், 2016). அண்மையில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சமூகவலைத்தளங்களை ஒழுங்குபடுத்த, முக்கியமாக வெறுக்கத்தக்க பேச்சுக்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். பொதுமக்களிடையே சமய, இன மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் வரைவு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சீர்திருத்தங்கள்

ஊடகத்துறையில் ஒரு பங்காளராகவும், அதேவேளை ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்தி ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவும் அரசாங்கம் இருந்து வருவது, ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகைகளை தடை செய்வதற்கும், பிரசுரங்கள் மற்றும் ஒலிஒளிபரப்புக்களை தணிக்கை செய்வதற்கும், சில உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு அனுமதி கோருவதற்கும் அரசாங்கத்திற்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியுள்ளமை இலங்கையின் ஊடகத்துறையை மேலும் கட்டுப்படுத்துகின்றது. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் 14(1)அ பிரிவிற்கு அமைய பிரசுரமானது அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாக்கப்பட்ட உரிமையாக காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

தேர்தல் சமயங்களில் அரச ஊடகங்களை முறைகேடாக பயன்படுத்துவதை கட்டப்படுத்த தனித்தனி விதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்காக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தை கையகப்படுத்தவும் போட்டி அதிகாரசபை (அதிகாரங்கள் மற்றும் பணிகள்) சட்டம் 2002 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்கத்தின் கீழ் போட்டி அதிகாரசபையை நியமிக்க தேர்தல் ஆணையகத்திற்கு அதிகாரம் உள்ளது. எனினும், போட்டி அதிகாரசபையின் பயன்பர்டு  சீரானதாக இல்லாததுடன், தேர்தல் சமயங்களில் அரச ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே பெற்றிருக்கின்றது. (உலக வங்கி, 2005)

ஊடகத்துறையை சீர்திருத்துவதற்காக பல்வேறு உத்திகள் மற்றும் யோசனைகள் கடந்த பல வருடங்களாக முன்மொழியப்பட்டிருக்கின்றன. ஒலிபரப்பு சேவைகளுக்கு சுயாதீனமான ஒழுங்குபடுத்தும் அமைப்பை உருவாக்குதல், அரசுக்கு சொந்தமான பத்திரிகையின் (லேக் ஹவுஸ்) அடிப்படை உரிமத்துவத்தை பரந்ததாக்குவது மற்றும் இலங்கை பத்திரிகை பேரவையை இல்லாதொழிப்பது என்பது இவற்றில் சில முயற்சிகள். ஊடகத்துறையை ஆராய்ந்து அவற்றுக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்கான முதல் முயற்சியாக 1995 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் சட்டங்களின் சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆணைக்குழுவின் (ஆர்.கே.டபிள்யூ.கூன்சேகர குழுவின் அறிக்கை என பொதுவான அறியப்பட்டது) அறிக்கை வெளியிடப்பட்டது. எனினும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான பரிந்துரைகள் இதுவரையிலும் செயல்படுத்தப்படவில்லை. 

இந்த அறிக்கையானது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் உட்பட பல பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. 1998 ஆம் ஆண்டின் கொழும்பு பிரகடனம் 2008 ஆம் ஆண்டில் மீளாய்வு செய்யப்பட்டது. அதன் போதும் அரசியலமைப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது, 1973 ஆம் ஆண்டின் இலங்கை பத்திரிகை பேரவைச் சட்டம் போன்ற சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது, இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த சுயாதீனமான ஒழுங்குபடுத்தும் அமைப்பை உருவாக்குவது போன்றவற்றை முன்வைத்தது. 2005 ஆம் ஆண்டின் தொலங்கமுவ பிரகடனம், உண்மை நிலை, பன்முகத்தன்மை, மனித உரிமைகளுக்கான மதிப்பு மற்றும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான அடிப்படை கோட்பாடுகளை உள்வாங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. எனினும், இந்த பிரச்சாரம் செயற்படுத்தப்படவில்லை. 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கு ஊடகங்களின் பங்களிப்பினை முக்கியத்துவப்படுத்தும் வெலிகம பிரகடனம் பல ஊடக நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2008 ஆம் ஆண்டில் தேசிய ஊடக கொள்கைகளை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதிலேயே இது அதிக கவனம் செலுத்தியது. அதேநேரம் ஊடக சுதந்திரத்தை சமப்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கினை கவனம் செலுத்த தவறிவிட்டது.

மூலம்

Legislation/ Regulations

Associated Newspapers of Ceylon Ltd (Special Provisions) Act No. 35 of 1981

Competent Authority (Powers and Functions) Act No. 03 of 2002

Official Secrets Act No. 32 of 1955

Prevention of Terrorism (Temporary Provisions) Act No. 48 of 1979

Private Television Broadcasting Station Regulations – Extraordinary Gazette No. 1669/25 of 03rd September 2010

Public Performance Ordinance No. 07 of 1912

Public Security Ordinance No. 25 of 1947

Public Trustee Ordinance No. 01 of 1922

Sri Lanka Broadcasting Corporation Act No. 05 of 1974

Sri Lanka Press Council Law No. 05 of 1973

Sri Lanka Rupavahini Corporation Act No. 06 of 1982

Sri Lanka Telecommunications Act No. 25 of 1991

Brady. L. (2005). Colonials, bourgeoisies and media dynasties: A case study of Sri Lankan media. Retrieved from Central Queensland University on 25 July 2018.
Centre for Policy Alternatives. (1998). Colombo Declaration on Media Freedom and Social Responsibility. Retrieved from the Centre for Policy Alternatives on 25 July 2018.
Crawley W, Page D and Pinto Jayawardena K (eds.). (2016). Embattled Media: Democracy, Governance and Reform in Sri Lanka. Retrieved from Google Books on 25 July 2018.
Jayaratne T, Pinto-Jaywardena K, de Almeida Guneratne J P.C. and Silva S. (2015). Sri Lanka Enabling Environment Study. Retrieved from World Bank on 25 July 2018.
Pinto Jayawardena K and Gunatilleke, Gehan. (2012). Legal, Industry and Educational Reforms pertaining to the Print Media Retrieved from the Institute of Commonwealth Studies on 25 July 2018.
Press Briefing of Cabinet Decision. (2018). Protection of Human Dignity and Social Harmony Bill. Retrieved from the Office of the Cabinet of Ministers- Sri Lanka on 25 July 2018.
Secretariat for Media Reforms (2016). Rebuilding Public Trust: An Assessment of the Media Industry and Profession in Sri Lanka. Retrieved from Media Support on 25 July 2018.
The Sunday Times. (2009). Colombo Declaration 1998: Media groups reaffirm support. Retrieved from the Sunday Times on 25 July 2018.
The Sunday Times. (2009). Press Council reactivated. Retrieved from the Sunday Times on 25 July 2018.
The Sunday Times. (2015). Media groups slam Sirisena for bringing back Press Council. Retrieved from the Sunday Times on 25 July 2018.
Wijesiri, Lionel. (2018). Will regulating social media stop hate speech? Retrieved from Daily News on 25 July 2018.

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ