அதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு?
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் உலக ஊடக சுதந்திரச் சுட்டியின் (World Press Freedom Index) படி 180 நாடுகளில் 127வது நாடாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்களின் உரிமைத்துவத்தில் அரசியல் மயப்படுதல் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக தொடர்வதன் காரணமாகவும், அதுவே இந்த ஒப்பீட்டளவில் குறைவான தரப்படுத்தலுக்கான காரணியாகவும் அமைந்துள்ளது. எங்களது கண்டுபிடிப்புக்கள் ஊடகங்களுடனான அரசியல் தொடர்புகள், பிணைப்புக்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்களை அலசி ஆராய்வதுடன் எவ்வாறு இப்படியான நெருக்கமான தொடர்புகள் நடுநிலைமையையும் பன்மைத்தன்மையையும் பாதிக்கும் , அதாவது ஊடகங்களில் எவ்வாறு அதிகமான அரசியல் பங்குடைமை ஆனது, எவ்வாறு அதிகளவு செல்வாக்கு செலுத்துவதாக மாறுகிறது என்பது குறித்தும் வினவுகின்றன. இது அரசியல் சேர்க்கைகளுடன் தொடர்புபட்ட பொதுவான இடர்கள் பற்றி பரீட்சிப்பதுடன்,தற்போதைய சட்ட வரையறைகளை ஆராய்வதுடன், அரசியல் சேர்க்கைகளுடன் ஊடகங்களுக்கு இருக்கும் தற்போதைய நிலை குறித்து விளக்கமும் தருகிறது.
இதிலே ஆபத்து இருக்கிறதா?
ஊடக உரிமைத்துவமானது,ஊடகங்களின் உள்ளடக்கங்களில் கணிசமானளவு சம்பந்தத்தைக் கொண்டிருப்பதால், பொதுக்கருத்தை வடிவமைப்பதில் முக்கியமான வகிபாகத்தைப் பெறுகிறது. அரசியல்வாதிகளின் கரங்களில் இருக்கும் ஊடகங்களானவை, அவர்களது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, பக்கச்சார்பான செய்தி வழங்கல், தங்களது அரசியல் லாபங்களை உயர்த்துதல் மற்றும் போட்டியாளர்களை பரிகசித்தல் எனப் பயன்படலாம். தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களும் இந்தப் பாங்கில் வேறுபட்டவையல்ல, அவையும் கூட அரசியல் சேர்க்கைகளுக்கு உட்பட்ட, அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் போலவே, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் சுயநலன்களின் அடிப்படையிலேயே பணியாற்றும்.
ஒரு உதாரணமாக, 2017இல், 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிவாய்ந்த அலைவரிசை ஒன்று எதுவித ஏலம் அல்லது கேள்விப்பத்திர நடைமுறையும் இல்லாமல், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாக அறியப்பட்டதை அடுத்து இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவராண்மையகத்தின் (ICTA) தலைவராகவிருந்த முகுந்தன் கனகேயை பதவி விலகுமாறு தற்போதைய ஜனாதிபதி கேட்டதாகத் தெரிவிக்கப்படுவதோடு அவர் அவ்வாறே செய்தும் இருந்தார்.
இதற்கு மாறுபட்ட விதத்தில் பங்குகளைக் கொண்டிருத்தல் அல்லது பங்குதாரரோடு உறவுகளைக் கொண்டிருத்தல் என்பன பக்கச்சார்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்குமாறு தானாகவே செய்வதில்லை. விஜேவர்தன குடும்பத்தின் செய்திப் பத்திரிகையான டெய்லிமிரர் விஜேவர்தன குடும்பத்தின் உறவினரான தற்போதைய பிரதமரை பகிரங்கமாகவே விமர்சித்த போது இது தெளிவானது. எப்படியாயினும், நேரடியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அவரது குடும்பத்தின் வழியாகவோ, ஊடக உரிமைத்துவத்தில் இருக்கும் நெருக்கமான தொடர்பு, பக்கச்சார்பின்மைக்கு பாரிய நெருக்கடியை வழங்குவதாகவும், அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ஊடகங்கள் வாயிலாக அதிக செல்வாக்கை செலுத்தும் சந்தர்ப்பத்தையும் தருகின்றன.
சட்டம் என்ன சொல்கிறது?
தற்போதைய நிலையில், ஊடக நிறுவனங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அவர்களது குடும்ப அங்கத்தவர்களோ பங்குகளைக் கொண்டிருப்பதைத் தடுக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் எவையும் இல்லை. உரிமையாளர்களும் நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் படிவங்களில் தங்களது அரசியல் தொடர்புகளையோ அல்லது தொழிற்துறை முரண்பாடுகளை பற்றியோ குறிப்பிடவேண்டிய கடப்பாடும் இல்லை. இப்படியான சட்டவாக்கம் இன்மையால், இலங்கையின் ஊடகப் பரப்பில், ஊடகங்களின் அரசியல் உரிமையானது தொழிநுட்பரீதியாக சட்டரீதியானதாகவே தெரிகிறது.
இதேவேளை, யாராவது ஒருவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஊடக நிறுவனத்துடன் நிதியியல் வாயிலாக தொடர்புபட்டுள்ளாரா என்பதை 1975ஆம் ஆண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டத்தின் முதலாம் பிரிவின் மூலமாக 750 ரூபாய் (4.34 அமெரிக்க டொலர்கள்) கட்டணத்தில் அறிந்துகொள்ளலாம். இந்தச் சட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் சொத்துக்கள், வியாபார நோக்கங்கள் அல்லது பங்குகள் பற்றிய வெளிப்படைத்தன்மைக்கு அனுமதியளிக்கிறது.
எவ்வாறாயினும் இந்த சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள், குறிப்பாக வரைபுகள் 7(4) மற்றும் (5) போன்றவை இந்தத் தகவல்களை பொதுவெளியில் ஆராய்வதைத் தடுக்கின்றன.எனினும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்தத் தகவல்களைப் பெற்று பகிரங்கமாக விவாதிக்க முடியும்.
தற்போதைய நிலை என்ன?
உரிமைத்துவத்தில் அரசியல் சேர்க்கைகள் இருப்பதானது,பல்வேறு வேறுபட்ட நிலைகளில் அதிகமாகவோ குறைவாகவோ வெளிப்படுத்தப்படலாம். அவை (1) அரசங்கம் அல்லது முன்னையஃதற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேரடியாக ஊடக நிறுவனங்கள் சொந்தமாக்கப்படுவது (2) தங்களது குடும்ப அங்கத்தவர்கள் மூலம் ஊடக நிறுவனங்கள் சொந்தமாக்கப்படுவது (3) சில குறித்த அரசியல் கடசிகள் அல்லது வேட்பாளர்கள் பக்கமாக தனியார் ஊடக நிறுவனங்கள் சாய்வுநிலை கொள்ளுதல்.
(3)ஆம் வகையில் அரசியல் தொடர்புகளை ஆராய்ந்தறிவதும் உறுதிப்படுத்துவதும் பலவேளைகளில் கடினமென்பதால், ஊடக உரிமையாண்மை கண்காணிப்பு (MOM) குழுவானது (1) மற்றும் (2) வகைகளை கற்கைக்காக எடுத்த 46 நிறுவனங்களுக்கு பிரயோகித்தது. இது எவ்வாறாயினும் (3) வகைக்குட்பட்ட அரசியல் தொடர்புகள் நிலவவில்லை என அனுமானிக்கவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்கள் தனித்தனியான ஊடகப் பிரிவுகளின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
- அச்சு - 12இல் 7 அச்சு ஊடகங்கள் (1)ஆம் வகையின் கீழ் வருகின்றன. இதேவேளை, 12 இல் 2 அச்சு ஊடகங்கள் (2)ஆம் வகையில் உள்ளடங்குகின்றன.
- வானொலி - 11 வானொலி நிலையங்களில் 1 (1)ஆம் வகையில் வருவதுடன், 5 வானொலிகள் (2)ஆம் வகையில் உள்ளடங்குகின்றன. அதாவது பாதிக்கு மேற்பட்ட வானொலிகள் அரசியல்ரீதியாக தொடர்புபட்டவையாக இருக்கின்றன.
- தொலைக்காட்சி - 12 தொலைக்காட்சி நிலையங்களில் 4 (1)ஆம் வகையில் வருவதுடன், 2 தொலைக்காட்சிகள் (2)ஆம் வகையில் உள்ளடங்குகின்றன. அதாவது பாதிக்கு மேற்பட்ட வானொலிகள் அரசியல்ரீதியாக தொடர்புபட்டவையாக இருக்கின்றன. இதன் விளைவாக பாதிக்கு மேற்பட்ட பிரதான ஒளிபரப்புக்கள் நேரடியாக அரசாங்கம், அரசியல்வாதிகள் அல்லது அவர்களது குடும்பத்தவர்களால் சொந்தமாக்கப்பட்டுள்ளன.
- இணையம் - 11 இல் 4 இணையத்தளங்கள் (1)ஆம் வகையின் கீழ் வருகின்றன, அதே நேரம் 2 (2)ஆம் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் 2 இணையங்கள் பற்றிய - லங்கா ஊ நியூஸ், கொசிப் லங்கா நியூஸ்- உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. என்றாலும், லங்கா ஊ நியூஸ்இன் சுயவிபரத்தில் குறிப்பிட்டது போல, கல்வித்துறையினரும் செய்தித் தகவல்களும் இவ்விணையமானது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவுடன் தொடர்புபட்டது என்று குறிப்பிடுகின்றன. (லங்கா C நியூஸ்இன் சுயவிபரத்தைப் பார்க்கவும்)
MOM ஆனது 46 ஊடக நிலையங்களைப் பற்றி வாசகர்கள், நேயர்களின் பங்குகளின் அடிப்படையில், மிகப் பரந்தளவிலான புலனாய்வாய் மேற்கொண்டிருந்தாலும், அரசியலால் தொடர்புபட்டு கட்டுப்படுத்தப்படும் ஊடக நிலையங்களின் எண்ணிக்கையும் வீதமும் ஒவ்வொரு வகையிலும் இதை விட அதிகமாக இருக்கலாமென்பதோடு, இன்னும் கூர்ந்த கண்காணிப்பு அவசியமானதாக இருப்பதோடு, எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் ஊடகங்களுக்கு அரசியல் சேர்க்கைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து பகிரங்க விவாதம் நிகழ்த்தவேண்டிய அவசியமும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கள் ஒரு பிரதானமான பொது முன்னுரிமையைச் சுட்டி நிற்கின்றன : இலங்கை ஊடகங்களின் பன்மைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை ஆகியவற்றை வலிமையற்றதாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதனால்,அரசியல்வாதிகளின் ஊடக உரிமைத்துவத்துக்கு இருக்கும் நெருங்கிய தன்மை குறித்து பாரியளவிலான பொதுக் கண்காணிப்பு அவசியமானது.